articles

img

குறைந்தபட்ச உலகளாவிய கார்ப்பரேட் வரி....

அமெரிக்காவில் பைடன் நிர்வாகம் கோவிட்நிவாரண நிதி 1.9 டிரில்லியன் டாலர்களைஅறிவித்திருந்தது.  தற்போது உள்கட்டுமானத்திற்காக 2.3 டிரில்லியன் டாலர்களை அறிவித்துள்ளது.முதலில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி சில மாதங்களுக்குள் கோவிட் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும்.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 2.3 டிரில்லியன் டாலர் நிவாரண நிதி மனித வள கட்டமைப்பிற்கு எட்டு வருடகாலக்கட்டத்திற்குள் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  (அதாவது மருத்துவம், கல்வி, சுகாதாரகட்டமைப்புகள், அரசு கட்டமைப்புகளை உருவாக்குதல்).  இதற்காகத்தான் தற்போது பைடன் நிர்வாகம் கார்ப்பரேட் வருமான வரி விகிதத்தை சிறிது சிறிதாக அதிகரித்து  28சதமாக்க வேண்டுமென உத்தேசித்துள்ளது.  டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது கார்ப்பரேட் வரி விகிதத்தை 35 சதத்தில் இருந்து 21 சதமாகக் குறைத்திருந்தார்.  

நவீன தாராளவாத ஆட்சி முறை அமலுக்கு வந்து 50ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சமூக ஜனநாயகநிகழ்ச்சி நிரல் முன்னுக்கு வந்துள்ளது.  இன்றைய முதலாளித்துவத்தில் சமூக ஜனநாயக நடவடிக்கைகளுக்கான தடைகள் மக்களின் கவனத்திற்கு வந்துள்ளன என்பதும், மூன்றாம் உலக நாடுகளின் மீது விதிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகள் இனி மக்களால் கவனிக்கப்படும் என்பதும் தான் இத்தகைய லேசான மாற்றம் ஏற்படக்காரணம்.ஆனால் அதே வேளையில், அமெரிக்கா மற்றொரு முக்கியமான விஷயம் பற்றி யோசிக்கிறது.  ஒரு வேளை அமெரிக்கா மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை உயர்த்தினால், முதலீடுகள், கார்ப்பரேட் வரி குறைவாக உள்ள நாடுகளுக்கு இடம் பெயரும் அபாயம் எழலாம்;  அல்லது வரியிலிருந்து தப்பித்துக் கொள்ள, ‘வரியற்ற சொர்க்கமாக’த் திகழ்கிற சில நாடுகளை நோக்கிச் செல்லும்அபாயமும் உள்ளது.   எனவே, அமெரிக்கா பிற நாடுகளையும் கார்ப்பரேட் வரியை உயர்த்துமாறு தற்போது வற்புறுத்துகிறது.  அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் ஏலன் உலகளவில்குறைந்தபட்ச கார்ப்பரேட் வரி விகிதத்தை 21 சதம் என வைப்போம் என முன் மொழிந்துள்ளார். 

உலக அனுபவம் என்ன?
உலக அனுபவம் கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைப்பதில் தான் போட்டிநிலவுகிறது.  1980ல் 40 சதமாக இருந்த கார்ப்பரேட் வரி விகிதம் 2020ல் 24 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இதன்விளைவாக நாடுகளின் வரி வருவாயில் கணிசமான  இழப்புஏற்பட்டுள்ளது.  குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ளநாடுகளில் மொத்த வரி வருவாயில் கார்ப்பரேட் வரி வருவாயின் பங்கு அதிகம் என்பதால், அது கணிசமாக குறைக்கப்பட்டதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நஷ்டத்தின் விகிதம் அதிகம்.  அதே நேரத்தில் உயர் வருமானம் உள்ள நாடுகளில் மொத்த வரி வருவாயில் கார்ப்பரேட் வரி வருவாயின் பங்கு குறைவு என்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நஷ்டத்தின் விகிதப் பங்கு குறைவு. 

தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பின் காரணமாகத் தான் மூன்றாம் உலக நாடுகள் கல்வி, சுகாதாரம், மற்றும் சமூக நலத்திட்ட செலவினங்களைக் குறைக்கின்றன.  அதேபோல மறைமுக வரியை அதிகரிக்கின்றன.  இரண்டு நடவடிக்கைகளிலும் ஏழைகளிடம் இருந்து உறிஞ்சி செல்வந்தர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.  உலக வங்கியும், சர்வதேச நிதியமும் கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தால் தான் பெரிய முதலீடுகள் உங்கள் நாடுகளுக்கு வரும் என்று கூறி அறிவுறுத்தி, அச்சத்தை உருவாக்கி, தங்களுடைய தாராளமயக் கொள்கையை அமலாக்கின. 

உண்மை என்ன?
உண்மையில் ஒரு ஏழை நாட்டிற்குள் அந்நிய நேரடி முதலீடு வருவதற்கும் அல்லது ஒட்டு மொத்த முதலீடு வருவதற்கும் கார்ப்பரேட் வரி விதித்தலுக்கும் தொடர்பு உள்ளதா? உண்மையில் ஒரு மூன்றாம் உலக நாட்டின் சந்தைக்குள் வரும் தனியார் மற்றும் கார்ப்பரேட் முதலீட்டின் அளவுஎன்பது அந்த சந்தையில் இருக்கும் உள்நாட்டு கிராக்கியைபொறுத்தே அமையும்.  கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைப்பதனால் அந்த நிறுவனத்தின் இறுதி லாபத்தில் ஒரு உயர்வினை ஏற்படுத்துமே அன்றி அதனால் முதலீடு ஒரு நாட்டிற்குள் வருவதை முடிவு செய்யாது.  ஏனென்றால் அதனால் கிராக்கி உயராது.  இதே தான் உலகச் சந்தைக்கும் பொருந்தும். 

இன்னும் சொல்லப் போனால் கார்ப்பரேட் வரியை உயர்த்தினால் மூன்றாம் உலக நாடுகளுக்கு முதலீடு போய்விடும் என்ற அமெரிக்காவின் வாதத்திலேயே கூட உண்மை இல்லை.  உண்மையில் முதலீடுகளில் தாக்கம் செலுத்தும் காரணிகளில் ஒரு நாட்டின் கூலி விகிதம் முக்கியமானது.  மூன்றாம் உலக நாட்டில் ஒரு ஆலையை துவங்கினால் லாப விகிதம் அதிகரிக்கும் என்பதற்கு இது தான் காரணமாகுமே தவிர கார்ப்பரேட் வரியல்ல.  அதன் பிறகு அந்த நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் படித்த, பயிற்சி பெற்ற பணியாட்களின் எண்ணிக்கையும் தரமும் காரணிகளாகும்.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பயிற்சி பெற்றபடித்த வேலையாட்கள், கட்டுமான வசதி என்பதும் மூன்றாம்உலக நாடுகளில் இவற்றின் அளவு என்பதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில், வரிவிகிதத்தில் மட்டும்வேறுபாடு இருக்கிறது என்றால் அப்போது இந்த வரி விகிதம் முதலீட்டில் ஒரு தாக்கத்தை உருவாக்கும்.  எனவே,மூன்றாம் உலக நாட்டில் கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைப்பதால்  பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது. இன்னொன்று பல நாடுகளும் இதே போல போட்டி போட்டுக் கொண்டு குறைக்க முற்படும் போது  முதலீட்டு முடிவில் இது எந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி உள்ளது. 

கூட்டுக் களவாணிகள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் கார்ப்பரேட் வரிவிகிதம் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.  ஏப்ரல் 1, 2019ல் 30 சதத்தில் இருந்து 22 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  புதிய கம்பெனிகளுக்கு 25 சதத்தில் இருந்து 15 சதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.  உண்மையில் இதனால் அரசின் வரி வருவாய் குறைந்து கொண்டே போகிறது.எனவே, அமெரிக்க அமைச்சர் ஜெனட் ஏலனின் முன்மொழிவினை இந்தியா வரவேற்கும் என நினைக்கலாம்;  ஆனால், இந்தியா அதை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறது.எந்தவொரு மக்கள் நலத்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் எடுப்பதில் மோடி அரசுக்கு அக்கறை இல்லை. சமூக ஜனநாயக நடவடிக்கைகளை எடுப்பதிலும் அக்கறைஇல்லை.  இதற்கான ஒரே காரணம், தன்னுடைய முதலாளித்துவ கூட்டுக் களவாணிகளின் நலன்களை உறுதி செய்வது தான்.  அதற்காகத் தான் கார்ப்பரேட் வரியை குறைத்தால் முதலீடு கூடும் என்ற போலியான வாதத்தினை மோடி அரசு முன் வைத்துக் கொண்டிருக்கிறது. 

பல முதலாளித்துவ நாடுகளில் அமெரிக்க அமைச்சர் ஏலனின் முன்மொழிவிற்கு ஆதரவு உள்ளது என்றாலும், பொது அங்கீகாரம் வரவில்லை.  ஐக்கிய நாடுகள் சபையில் விவாதித்து பொது முடிவிற்கு வரவில்லை.  அமெரிக்காவே கூட தன்னுடைய முந்தைய முன் மொழிவில் இருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது.  பொறுத்திருந்து பார்ப்போம்.  ஆனால், உலக முதலாளித்துவத்தின் நவீனதாராளமயக் கட்டம் முடிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

கட்டுரையாளர் : பேரா.பிரபாத் பட்நாயக்

நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 6) 

தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

;